தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி, கல்லூரி வளாகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி; சட்ட மசோதா நிறைவேற்றம்! - ASSEMBLY SESSION

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வளாகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் வரி வசூலிப்பதற்கு ஏதுவான சட்ட மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 10:38 PM IST

சென்னை : பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வளாகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் வரி வசூலிப்பதற்கு ஏதுவான சட்ட மசோதாவை சட்ட சபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார்.

அதில், கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க :சட்டப்பேரவையை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவதாக கூறினீர்களே? - சபாநாயகரை நோக்கி இபிஎஸ் கேள்வி!

இந்த மசோதா சட்டசபையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மசோதாவுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

"இசை நிகழ்ச்சி, நாடக காட்சிகளுக்கு கேளிக்கை வரி விதிப்பது சரிதான். ஆனால் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி வசூலிக்கக்கூடாது. இதுபோன்ற சட்டங்களை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தக் கூடும்" என்று தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே‌.என்.நேரு, "முன்பு சினிமா, நாடகங்கள் போன்றவற்றுக்கு மட்டும் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுக்கும் அடிப்படை வசதிகளை செய்துவர வேண்டி இருப்பதால் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது.

ஆனால் மாணவர்கள் நலனுக்காக கல்வி வளாகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு வரி வசூலிக்கப்படாது. அந்த நிகழ்ச்சிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது." என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா, எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details