திருப்பூர்:திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிகழ்வு தினம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்துவது மகிழ்ச்சி அளிக்கின்றது." என்றார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,"மகாத்மா காந்தி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்றால் அது அம்பேத்கர்தான்.
அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கரின் புகழை குறைக்கின்ற முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் . ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்கள் நலனிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தும். ஆனால் இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது.