விழுப்புரம்: அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் திமுகவினர் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தலைமையில், 'சக மனிதர்களை சாதியின் பேரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டோம்' என்று திமுகவின் நிர்வாகிகள் மற்று கட்சி தொண்டர்கள் என அனைவரும் 'சமத்துவ நாள் உறுதிமொழி' எடுத்துக்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, "வாழ்நாள் எல்லாம் மக்களின் உரிமைகளைக் காக்கப் பாடுபட்டவர், அம்பேத்கர். அவர் வகுத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டம்தான் வேறுபாடுகள் இல்லாத சமூகம் கட்டமைக்க அடித்தளமிட்டது.
அதனைப் பேணி காக்க அனைவரும் பாடுபடுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மாபெரும் தலைவர்.
அவருடைய பிறந்தநாளை நம்முடைய தமிழக முதலமைச்சர் சமத்துவ நாள் உறுதிமொழியோடு கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி, இன்று (ஏப்.14) நாம் அம்பேத்கரின் பிறந்த நாளில் சமத்துவம் நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். இது வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் செயல்படுத்தவும் வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோடை வெப்பத்தை சமாளிக்க ரயில் பயணிகளுக்கு குடிநீர் - தெற்கு ரயில்வே ஏற்பாடு!