சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கூட்டத் தொடரில் மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
கவனஈர்ப்பு தீர்மானம்: சட்டப்பேரவையில் கூட்டம் நிறைவுற்ற பிறகு பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறுகையில், "கள்ளச்சாராய சாவுகள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரத்திற்கு துணைப்போன மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பதிலாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். எத்னாலை கள்ள சந்தையில் வியாபாரம் செய்த நிறுவனம் மீது காவல்துறையினர் எந்தவித வழக்கும் போடவில்லை. கள்ளச்சாராயம் மரணம் குறித்து நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது" என்றார்.
'கொலைக்கு ஒப்பானது':தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "கள்ளச்சாரயத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயத்தின் வியாபாரம் பெருகிவிடும் என்று அரசு இதுவரை கூறி வந்தது. சின்ன சின்ன இளைஞர்கள் போதைக்கு ஆளாகியுள்ளனர்.
கள்ளச் சாராயம் மூலம் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை போதையில் தள்ளக்கூடிய ஆட்சியாக உள்ளது. இரண்டாவது முறையாக இப்படி நடைப்பெறுகிறது. இது ஆளும் அரசு கொலை செய்யும் நிகழ்வுக்கு ஒப்பானது. அரசின் இயலாமையை, அலட்சியத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்" என்று கூறினார்.
'சட்டப்பூர்வ நடவடிக்கை':இதன் பின்னர் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன், "நேற்று பிரதமர் மோடி கங்கை நதி தன்னை தத்தெடுத்தாக சொல்லி இருக்கிறார். அவரை தத்தெடுத்தது கங்கை நதி அல்ல கூவம் நதி என்று தான் சொல்ல வேண்டும்.
கள்ளச்சாராயத்தால் இனி மரணம் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாரய விவகாரத்தில் முதல்வர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை எடுத்ததற்கு பாரட்டுக்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் இருக்கும் நிலையில் அதிகாரிகளை முடக்கிவிட்டு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்றார்
'பின்னணியில் இருப்பவர்கள்':தொடர்ச்சியாக பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளக்குறிச்சியில் களஆய்வு செய்து நேரடியாக இரங்கல் தெரிவிக்க உள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
பின்னணியில் இருப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த காவல் நிலையங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் ஒவ்வொரு கிராமங்களில் என்ன நடக்கிறது என்பதை முன்னறிவிக்க உளவுத் துறை உள்ளது. உளவுத் துறையை நவீனப்படுத்த வேண்டும்.
நூற்றுக்கணக்காணவர்கள் கள்ளச்சாரயம் குடிக்கும் அளவிற்கு வியாபாரம் பெருகி இருக்கிறது. அதை காவல்துறை கவனித்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இப்படி நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கள்ளச்சாரயத்தை விற்பனை செய்தவர்கள் மட்டும் அல்லாமல் வேதிப்பொருட்களை தயாரித்தவர்கள், விநியோகம் செய்தவர்கள், விநியோகம் செய்ய துணையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதல் அளித்தாலும் உளவுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிடை நீக்கம் தண்டனை அல்ல; குற்றத்திற்கு உடனடியாக இருந்த காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
'போலீசுக்கு தெரியாமல் நடக்குமா?':பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாரeயம் மரணம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 50 பேருக்கு மேல் உயிரிழப்பு இருக்கும் என கூறுகிறார்கள். ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். கள்ளச்சாராயம் எப்படி வந்தது? காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்குமா?
மாநிலத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். கள்ளச்சாராயம் பெருகும் எனக்கூறி டாஸ்மார்க் நடத்துகிறார்கள். அரசு நினைத்தால் மது இல்லாத தமிழகம் உருவாகும். கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்த உள்ளோம். அரசின் விசாரணை ஆணையத்தால் ஒரு பயனும் இல்லை" என்று தெரிவித்தார்.
'அரசின் நிர்வாக திறமையின்மை':அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், "கள்ளக்குறிச்சி கள்ள சாராய உயிரிழப்பு விவகாரம் திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டு. கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை ஒடுக்குவதற்கு ஆளும் திமுக அரசு தவறிவிட்டது" என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன், "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை கஞ்சா என மாறி இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலை தெரிவிக்கிறோம். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக துணை நிற்கும் என்றும்அவர் கூறினார். கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்றுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகம் முழுவதும் போதை கஞ்சா கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படாமல் தலைவிரித்து ஆடுகிறது" என்று ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:கள்ளச்சாராய மரணம்: இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம், விசாரிக்க ஒரு நபர் ஆணையம் - முதல்வர் அறிவிப்பு! - Kallakurichi liquor death