சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி ஒருவர் தங்கப் பசை அடங்கிய 2 பாக்கெட்டுகளை கடத்திக் கொண்டு வந்துள்ளார்.
அவர், அந்த தங்கப் பசை பாக்கெட்டுகளை, குடியுரிமை அலுவலகம் அருகே உள்ள பயணிகள் கழிவறையில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். பின்னர், அந்த கடத்தல் ஆசாமி குடியுரிமை சோதனைகள், சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் விமான நிலைய ஒப்பந்த பணியாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, கழிவறையில் இருக்கும் தொட்டி அருகே மறைத்து வைத்திருக்கும் தங்கப் பசை அடங்கிய இரண்டு பாக்கெட்களை, வெளியில் எடுத்து வந்து, திரிசூலம் ரயில் நிலையத்தில் தன்னிடம் ஒப்படைக்குமாறும் கூறியுள்ளார். மேலும், அதற்காகக் கணிசமான தொகையையும் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, அந்த தற்காலிக ஒப்பந்த ஊழியர் கழிவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 தங்கப் பசை கொண்ட பாக்கெட்டுகளையும், தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணி அளவில், சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதி வழியாக, வெளியே செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், சந்தேகத்தில் பேரில் அந்த தற்காலிக ஊழியரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும், அவருடைய செல்போனை வாங்கி, அவருக்கு வந்துள்ள அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். இதனால் அச்சமடைந்த ஒப்பந்த ஊழியர், தான் வெளியில் செல்லவில்லை எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, 2 தங்கப் பசை பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அதில் 533 கிராம், தங்கப் பசை இருந்தது கண்டறியப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.29 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, விமான நிலைய ஒப்பந்த ஊழியரையும், தங்கப் பசையையும் பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் தற்காலிக ஒப்பந்த ஊழியரைக் கைது செய்த விமான நிலைய சுங்க அதிகாரிகள், கடத்த முயன்ற தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவருடைய செல்போனில் பதிவாகி இருந்த இலங்கையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியின் செல்போன் எண்ணைவைத்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, இதைப்போன்ற கடத்தலுக்கு ஒப்பந்த ஊழியர்கள் துணைபோவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அம்பானி இல்ல நிகழ்வில் கொள்ளை.. திருச்சியைச் சேர்ந்த 5 பேர் டெல்லியில் கைது!