திருச்சி: திருச்சியில் இருந்து இன்று மாலை 5:40 மணிக்கு 141 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் ஒன்றரை மணிநேரமாக தரையிறங்க முடியாமல் திருச்சி பகுதியில் வானில் வட்டமடித்து வருகிறது.
விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கும் முயற்சியில் விமானிகள் ஈடுபட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் (Credit - ETV Bharat) இதனிடையே, சுமார் இரண்டு மணி நேரமாக திருச்சி நகரத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறங்கிய உடன் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பயணிகளின் உறவினர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.