தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலை. பதிவாளர் நேர்முகத் தேர்வு: அகில இந்திய பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு! - SALEM PERIYAR UNIVERSITY

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேர்முகத் தேர்வை நடத்தக் கூடாது என அகில இந்திய பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2025, 7:50 PM IST

சேலம்: தமிழ்நாடு அரசின் ஆணைக்கு எதிராக மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ள சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் நேர்முகத் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அகில இந்திய பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு (AIFUCTO) வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய பல்கலை. மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “துணை வேந்தர் பதவி முடிய மூன்று மாதங்களுக்கு முன்பு எந்த வித பணி நியமனமோ கொள்கை முடிவுகளோ பல்கலை நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அனைத்து பல்கலைக் கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதனை மீறும் வகையில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் மார்ச் 1ஆம் தேதி பதிவாளர், தேர்வாணையர் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளார். இது கண்டனத்திற்கு உரியது.

மேலும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரானது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி முடிய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அவர் பதிவாளர் தேர்வினை நடத்துவது சட்டத்திற்கு முரணானது. ஊழல் புகார் விசாரணை அவர் மீது நடந்து வரும் நிலையில், கொள்கை முடிவுகளில் தலையிடுவது கண்டனத்திற்குரியது. மேலும் ஆசிரியர் பணி மேம்பாடு தேர்விலும் பல்வேறு குறைபாடுகள் நிகழ்ந்து உள்ளன.

கல்வியியல் துறையில் ஒரு ஆசிரியர் விண்ணப்ப கூறாய்வு செய்வதில் சென்ற முறை தகுதி பெறுகிறார். ஆனால் அவர் நேர்காணலில் தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டதால் மீண்டும் இம்முறை விண்ணப்பம் செய்கிறார். ஆனால் இம்முறை கூறாய்வில் அவர் தகுதி பெறவில்லை என பல்கலை நிர்வாகம் கூறுகிறது. கடந்த முறை தேர்வானானவர் இம்முறை தேர்வாகாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.

கடந்த முறையை விட இம்முறை அவரின் மதிப்பெண் கூடுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே பணி மேம்பாட்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. ஆங்கிலத் துறையில் ஒரு ஆசிரியர் பணி மேம்பாடு கூறாய்வில் தேர்வு பெறாத நிலையில், மீண்டும் கூறாய்வு செய்து தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். இதனால் ஆசிரியர் பணி மேம்பாடு வழங்குவதிலும் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளது. ஒரு சில அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; லேப் டெக்னீஷியன் பணியிடை நீக்கம்!

எனவே தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு அரசு ஆணைக்கு எதிராக செயல்பட்டு பதிவாளர், தேர்வாணையர் தேர்வினை நடத்த துடிக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் செயலுக்கு முடிவு கட்ட வேண்டும். மேலும் பதவி முடிய மூன்று மாதங்களே உள்ளதால் அரசு ஆணையின்படி எவ்வித கொள்கை முடிவுகளையோ, பணி நியமனங்களையோ உயர்வுகளையோ துணை வேந்தர் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டு உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details