சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் நிலைபாடு சேலம்: சேலம், மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஏ.வி.ராஜ். இவர் 1988ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறார். 1993 முதல் 2003 வரை சேலம் ஒன்றிய செயலாளராக இருந்தார். பின்னர், சேலம் ஒன்றியத்தின் ஒன்றியக் குழுத்தலைவராக இவருடைய மனைவி பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, சேலம் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சேலம் மேற்கு ஒன்றியத்தின் செயலாளராக மீண்டும் பழனிசாமியால் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கக்கூடிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாஜலம் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக ஏ.வி.ராஜ் கூறிய குற்றச்சாட்டுச் சமூக வலைத்தளங்களில் தற்போது பதிவிடப்பட்ட நிலையில் அதிமுக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏ.வி.ராஜ் கூறுகையில், "சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள வெங்கடாசலம் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சேலம் புதுரோடு பகுதியில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அப்போது, அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 41 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடாஜலம், தனக்கு ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு தேர்தலில் 3 கோடி அளவில் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவருடைய சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 800 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. இதுமட்டுமின்றி அவர் தற்போது வசித்து வரும் வீடு மட்டும் 10 கோடி ரூபாய் மதிப்பாகும்.
இது மட்டுமில்லாமல் சேலம் அருகே பண்ணப்பட்டியில் 123 ஏக்கர் விவசாய நிலம், செம்மண் கூடல் பகுதியில் 7 ஏக்கர் விவசாய நிலம், சேலம் வெள்ளாளப்பட்டி அருகே வட்டக்காடு பகுதியில் 32 ஏக்கர் தென்னந்தோப்பு, ஆண்டிபட்டி பனங்காடு பகுதியில் பத்தாயிரம் சதுர அடி காலி நிலம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம், கரூரில் 20 ஏக்கர் விவசாய பண்ணை இடம், சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் பினாமி பெயரில் மூன்று வீடுகள், வாழப்பாடியிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 5 ஏக்கர் நிலம், சேலம் - ஏற்காடு பகுதியில் 15 ஏக்கர் எஸ்டேட், சேலம் இரும்பாலை முல்லை நகர்ப் பகுதியில் 16 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு, ஏழு பேருந்துகள், ஆறு பெட்ரோல் பங்குகள் எனச் சொத்து மதிப்பு 800 கோடியையும் தாண்டி உள்ளது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது 2019ஆம் ஆண்டில் என் உறவினருக்குப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாயும், சத்துணவு துறையில் இரண்டு பேருக்கு வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாயும், தொழில் விசயமாக 20 லட்ச ரூபாய் என மொத்தமாக அறுபது லட்ச ரூபாய் ஏமாற்றிவிட்டார். இதுபோல அவர் பலரிடம் ஏமாற்றி வாங்கிய சொத்துக்கள் ஆயிரம் கோடியைத் தாண்டும். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கை இல்லை.
திமுக அமைச்சராக இருந்த பொன்முடி மீது அமலாக்கத்துறை சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு அவரை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "வெங்கடாசலம் அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் பதவியில் நீடித்தால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் அதிமுகவிற்குக் குறையும். எனவே பதவியிலிருந்து வெங்கடாசலத்தை உடனடியாக நீக்க வேண்டும்" என்று தெரிவித்தார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீது அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜ், வைத்துள்ள குற்றச்சாட்டுச் சேலத்தில் மட்டுமல்லாமல் அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தமிழக வெற்றி கழகம் பெயர்ப் பிழை; ‘க்’ சேர்க்க உத்தரவிட்ட விஜய்!