கோயம்புத்தூர்: மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, "தமிழகத்தில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக திமுக அரசு சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி உள்ளது" என்றார்.
மேலும், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் எனவும், தமிழகத்தில் நடைபெறும் தொடர் கொலைகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர் ஆர்ப்பாட்டம்:முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "இனி அதிமுக சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முடிவாகியுள்ளது. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை அதிமுக தொண்டனும் ஒருவர் கூட ஓயக்கூடாது" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று கூறிவிட்டு, 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கெடுப்பு செய்கின்றனர். மேலும், தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன" என குற்றம் சாட்டினார்.
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம்: தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.கே.பாரதி மோகன் தலைமையில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.