சென்னை:அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டைகளை ராயபுரம் மற்றும் திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திமுக அமைச்சர்களும் திமுக நிர்வாகிகளும், போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்பதால் மத்திய அரசுக்கு சொம்பு தூக்கும் கட்சியாக மாறிவிட்டது. திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து திமுக ஃபைல்ஸ் என ஆளுநரைச் சந்தித்து அண்ணாமலை கொடுத்தார். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநரைச் சந்தித்து அண்ணாமலை வலியுறுத்தினாரா?
நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜகவை அழைத்து உள்ளதைப் பார்க்கும் பொழுது ஸ்டாலினின் தலைவராக மோடி மாறியுள்ளாரோ என தோன்றுகிறது. இதற்கு முன் இதுபோல் பாஜகவை அழைத்து, விளம்பரம் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தினாரா? தமிழகத்தில் மின் கட்டண உயர்வு முதல் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் விற்பனை கடுமையாக உயர்ந்து உள்ளதால் ஒட்டுமொத்த தொழில்துறையும் தமிழகத்தில் முடங்கிப் போய் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, எத்தனை ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர் என்பது குறித்து முதலைமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி அளித்தனர், அது என்ன ஆயிற்று?
திமுக அரசு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1,500 தனியார் பாருக்கு அனுமதி அளித்தது. தமிழகத்தில் பல இடங்களில் வக்ஃபு வாரிய சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இதற்கும் செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.