திருப்பூர்:திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அதிமுக சார்பில் அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் என்னும் மாமனிதர் உருவாக்கிய கட்சி அதிமுக. சில தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் நம் தலைவர் மக்களுக்காக வாழ்ந்தவர். அவர் தெய்வப்பிறவி. அதிமுகவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் ஆ.ராசா பேசி வருகிறார். தொண்டர்களின் மனம் காயப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறி வந்தது:தூய மனிதர் எம்.ஜி.ஆர் தொண்டனாக பேசுகிறேன். அவரை நேசிக்கக்கூடிய மக்கள் வெகுண்டெழுந்தால் தாக்குபிடிப்பாரா ராசா? 1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முகத்தைக் காட்டித்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ராசா இனிமேலாவது உளறுவதை நிறுத்தி விட்டு, நல்லதைப் பேசுங்கள். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள். அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் முன்னேறி வந்தது.
கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக: 50 ஆண்டு கால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில், அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்கு ஆயிரத்து 512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதம் முடிந்த நிலையில், 10 சதவீத பணி இரண்டரை ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கிய திட்டம் என்பதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டங்களை திட்டம் போட்டு நிறைவேற்றியது அதிமுக அரசுதான்.
அதிமுகவின் திட்டங்களைத்தான் திறந்து வைக்கின்றனர்: நாம் கொண்டு வந்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நாளை (பிப்.1) ஸ்டிக்கர் ஒட்டி திறக்கவுள்ளார். திமுக ஆட்சி வந்து என்ன திட்டத்தை செய்துள்ளனர்? அதிமுக கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகின்றனர். 3 ஆண்டு காலத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் திறந்து வருகின்றனர். திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.