சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை’ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் திமுக-வைப் போல, அதிமுக இல்லை.
சமரசம் இல்லாமல் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா. ‘உங்களால் நான், உங்களுக்காகவே நான்’ என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றியவர். சமூக நீதி, சமத்துவம், சமதர்ம சமுதாயம், ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை என்று வெறும் வார்த்தைகளுக்காகவும், வார்த்தை ஜாலங்களுக்காகவும், தேர்தல் வாக்குகளுக்காகவுமே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்ற திமுகவைப் போல அதிமுக இல்லை என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.
சமூக நீதியைக் காத்தவர்:OBC-க்கான இடஒதுக்கீட்டில் 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, 19 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி, ஒரே கையெழுத்தில் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைய இருந்த சூழ்நிலையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை வெளியிடச் செய்து, அதற்கு ஒரு சட்டப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி, சமூக நீதியைக் காத்தவர் ஜெயலலிதா.
2 கோடி தொண்டர்கள்:அவர்களைத் தொடர்ந்து பயணித்து வரும் நான், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், நீட் தேர்வின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், சமூக நீதியைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டைக் கொடுத்து மாணவர்களின் வாழ்க்கையில் மருத்துவக் கனவிற்கு விளக்கேற்றி வைத்தோம். அதிமுகவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டு இருந்த தொண்டர்கள், இன்றைக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர்.