சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று வடசென்னை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வடசென்னை, தென்சென்னை தொகுதி பொறுப்பாளர்களும், மாவட்டச் செயலாளருமான டி.ஜெயக்குமார், வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ மற்றும் பல நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது, வருகின்ற 2026 பொதுத்தேர்தலில் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டன என்றும், மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுரைகள் சொல்லப்பட்டதாகக் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பல நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், தற்போதைய திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதையும் மக்களிடையே கொண்டு செல்ல அறிவுறுத்தியதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களான தாலிக்குத் தங்கம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இந்த திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து நிறுத்தி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றும், திமுக அரசும் அதைக் கேட்கத் தவறிவிட்டது எனவும் கூறினார்.
மேலும் திமுக, மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் இருக்கிறது என்றும் விமர்சித்தார். பெரும் தொழிலதிபர் ஒருவர் முதலமைச்சர் மருமகனைச் சந்தித்து விட்டுப் போவதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்று முதலமைச்சர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும் எனவும், அங்கு சென்று தான் புறக்கணித்து இருக்க வேண்டும் என்று கூறியதோடு, மத்திய அரசு ஒரு சார்புத் தன்மையாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதை கூட்டத்தில் பங்கேற்று பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.