சேலம்:ஏற்காடு சுற்றுலாத் தளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “வறட்சி காரணமாக தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவதாக கூறியிருந்தார்கள்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இது வரை ஒரு தடுப்பணை கூட கட்டியதாக தெரியவில்லை. தடுப்பணைகளைக் கட்டி தண்ணீர் தேக்கி இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருக்காது. விவசாயம் பாதித்திருக்காது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்காது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கு நீரை கேட்டுப் பெற முடியாத கையாலாகாத அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. திமுகவிற்கு இந்தியா கூட்டணி மட்டுமே நோக்கமாக உள்ளது .தமிழக மக்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லை. இந்தியா கூட்டணி மூலம் தமிழக மக்களுக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? எதற்காக அந்த கூட்டணியில் திமுக உள்ளது என்று தெரியவில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய பேருந்து வாங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியாகி வருகிறது. தற்போது உள்ள நிலையில், அரசுப் பேருந்து அனைத்தும் பழுதடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அரசுப் பேருந்தில் பயணம் செய்ய மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டவில்லை என்று உதயநிதி ஸ்டாலின், ஒற்றைச் செங்கலை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று காட்டி வருகிறார். ஆனால், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான செங்கலை வைத்து தான் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதில் திமுகவிற்கு என்ன சுணக்கம் உள்ளது என்று தெரியவில்லை” என்றார்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி கேரளா சென்ற பயணம் குறித்து விமர்சனம் எழுந்து வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்தவர், “ரகசியமாக வெளிநாடு செல்பவரை யாரும் கேட்கவில்லை. தேர்தல் பரப்புரை பயணத்தின் போது வெகு நேரம் நின்ற காரணத்தினால் சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக சென்ற தன்னை பலவிதமான விமர்சனங்களை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: காணாமல் போன காங்., தலைவர் ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. நெல்லையில் பரபரப்பு! - Nellai Congress Leader Jayakumar