தஞ்சாவூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூர் திலகர் திடலில் அதிமுக கட்சி சார்பில் நேற்று (பிப்.29) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குவதில்லை. அதைக் கேட்டுப் பெற திராணியில்லாத அரசுதான், திமுக அரசு. கர்நாடகாவில் காங்கிரசும், பாஜகவும் ஆட்சிக்கு வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கர்நாடக அணையில் இருந்து திறக்க மறுக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி தண்ணீரை நம்பி, விவசாயிகள் சுமார் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்தனர். ஆனால் தண்ணீர் வராத காரணத்தினால், 3.5 லட்சம் ஏக்கர் தண்ணீர் இன்றி வறண்டு சேதம் அடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இன்றைக்குத் தமிழ்நாடு, முழுவதுமாக போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாகக் காட்சியளிக்கிறது. திமுக கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட பொறுப்பாளர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப் பொருட்கள் இருப்பதால், தமிழ்நாடு போதைப் பொருட்கள் மாநிலமாக உருவாவதற்குக் காரணமாக திமுக அரசு உள்ளது.
இதனை மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி, இதில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்" எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், சிவபதி, பரஞ்ஜோதி வளர்மதி மற்றும் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாவட்டச் செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன காரணம்?