சேலம்: ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்து 40 மாதங்களாகிவிட்டது. 2021 பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் இதுவரை பதிலளிக்கவில்லை. 20 நாட்களில் 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. இதைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது. திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் டன் கணக்கில் போதைப் பொருள் விற்பனையாகிறது. துரிதமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர், இளைஞர்கள் எதிர்காலம் சீரழிந்து விடும்.
செந்தில் பாலாஜி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்வீட்டில் ‘உன் தியாகம் பெரிது, உன் உறுதி அதனினும் பெரிது’ என்று தெரிவித்துள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது, அதனை தியாகம் என முதல்வரே சொல்வது அதற்கு உண்டான மரியாதையை கெடுத்துவிட்டது. நாடு சுதந்திரம் பெறுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் நீத்தவருக்கு தான் தியாகம் என்ற சொல் பொருந்தும். அப்படிப்பட்ட சொல்லை செந்தில் பாலாஜிக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது.