தமிழ்நாடு

tamil nadu

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம் - ஈபிஎஸ் பெருமிதம்! - athikadavu avinashi plan launched

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 8:44 PM IST

அத்திக்கடவு - அவிநாசி கூட்டு குடிநீர் திட்டம் வரலாற்று சாதனை திட்டம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: 60 ஆண்டுகால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறியதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “அத்திக்கடவு - அவிநாசி பகுதி வறட்சி நிறைந்த பகுதி. அப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் 60 ஆண்டு காலமாக போராடினர். இதுகுறித்து விவசாய சங்கத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது அவர்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் தன்னிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசியில் நானே அடிக்கல் நாட்டினேன். தேவையான நீர் குளம், குட்டைகளில் நிரப்ப ஜெயலலிதா அரசு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியது. கரோனா காலத்தில் ஒரு ஆண்டு இந்த பணி தொய்வு ஏற்பட்டது. அப்போது, 85 சதவீதம் பணி நிறைவடைந்து இருந்தது.

ஆட்சி மாற்றத்தினால், மீதமுள்ள 15 சதவீத பணிகள் மெல்ல மெல்ல ஆமை வேகத்தில் நடைபெற்று தற்போது முடிந்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம். விவசாயிகளுக்கு வரபிரசாதமான திட்டம். ஏழை, எளிய விவசாய மக்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சி அளித்துள்ளது. போராட்டக் குழுவினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் போல் 100 ஏரி திட்டம் நடந்து வருகிறது. நாங்கள் குரல் கொடுத்தால் நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் விடுகிறார்கள். மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் விட வேண்டும். வேகமாக இந்த பணி நடக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். அதிமுக கொண்டு வந்த திட்டம் என கருதாமல் நிதி ஒதுக்கி திட்டத்தை முடிக்க வேண்டும்” என்று ஈபிஎஸ் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details