தேனி: நாடாளுமன்ற மக்களவை தேரதலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ளது.
அன்று அதிமுக விசுவாசி இன்று திமுக வேட்பாளர்:திமுக தரப்பில் தேனி நாடாளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2002ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தன்னுடைய எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்தார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டார்.
பின்னர், 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து கொண்டார்.
அப்பொது, நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், தங்க தமிழ்ச்செல்வனும் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது தங்க தமிழ்ச்செல்வன் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 1 லடசத்து 44 ஆயிரம் வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அமமுகவில் இருந்து விலகி, அதே ஆண்டு திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
அதன் பின்னர், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல் முறையாக போடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக களம் இறங்கினார். ஆனால், 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பின்னர் அவருக்கு மாநிலங்களவையில் இருக்கை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.