சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியானது சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியானது 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு தூர்வாரி அழகுபடுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தூர்வாரும் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ஏரி திறப்பு விழா செய்ய வேண்டும் என்பதற்காக, பணிகள் தற்போது அவசர கதியில் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். இதற்கிடையே, ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏராளமாக பிடிபட்டு அழிக்கப்பட்டது.
சுமார் 20 கிலோ எடை கொண்ட மீன்கள் நூற்றுக்கணக்கில் பிடிபட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வகை மீன்களை உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏரியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் பிடிபட்டுள்ளதால், ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றி, பின்னர் அதில் மேலும் இந்த வகை மீன்கள் இருக்கின்றனவா என்று உறுதி செய்து, அதனை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.