சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், "தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்னர் காலநிலை மாற்ற தாக்க மதிப்பீட்டு ஆய்வை கட்டாயப்படுத்த வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு குறித்து வழக்கறிஞர் வெற்றி செல்வன் ஈடிவி பாரத் செய்திகளிடம் பகிர்ந்துகொண்டதாவது, "இந்தியாவில் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்கள் தொடங்க வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது திட்டத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும் என்றால், அந்த திட்டம் சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.
மேலும், ''தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் அதன் தன்மை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், மக்களின் உடல்நிலை, அவர்கள் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது அவசியம்.
அதற்கு சூழலியல் மேலாண்மை திட்டம் (EMV - Environmental Management plan) மற்றும் பாதிப்புகளைக் குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து விரிவான ஆய்வு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியலமைப்பு பிரிவு 14 மற்றும் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 21 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து விடுபட அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே, இந்த நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் பூவுலகு நண்பர்கள் சார்பில் இந்த மனுவை அளித்தோம்.
தற்போது ஏராளமான நிறுவனங்கள் சுற்றுசூழல் அறிக்கைகளை தருவதில்லை, எந்தவித ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் பின்வரும் சுற்றுசூழல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்துவது பின்வரும் சந்ததியினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக, மெக்காவில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ்க்கு மேலே சென்றதால் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அஸ்ஸாமில் கடந்த 2 வாரங்களாக வெள்ளத்தால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற பாதிப்புகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தால் தான் ஏற்படுகிறது. இது வருங்காலங்களில் மென்மேலும் அதிகரிக்கும்'' என வழக்கறிஞர் வெற்றி செல்வன் கூறினார்.
இதனிடையே, தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி பூவுலகின் நன்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் காலநிலை ஆய்வு செய்ய வலியுறுத்திய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!