சென்னை:அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், மக்கள் நலன் கருதி மின் கட்டன உயர்வை ரத்து செய்திடவும், மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியதுதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாடு நிலச்சரிவைத் தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வகுத்து தரும் தேர்தல் வியூக்கப்படி அனைவரும் பணியாற்றுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, வைகை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், "இன்று செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிமுகவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் உள்ளது. அதிமுகவுடனான கூட்டணியை முறித்தவர் பாஜக தமிழக தலைவராக உள்ள அண்ணாமலைதான் என குற்றம் சாட்டினார். மேலும், அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால் தான் மத்தியில் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசாக பாஜக அமைந்திருக்கின்றது என்றார்.
தொடர்ந்து கருணாநிதி நாணயம் வெளியீட்டிற்காக மத்திய அரசிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளார் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இந்தி மொழியை எதிர்த்துப் போராடி, சிறை சென்ற கருணாநிதிக்கு இந்தி மொழியில் நாணயம் வெளியிட்டுள்ளனர். அதற்கு தான் நன்றி தெரிவித்துள்ளனர்" என நகைச்சுவையாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், "அதிமுகவின் வளர்ச்சிக்கான வியூகங்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டது. அதிமுகவை மக்கள் மறந்துவிட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார், விரைவில் அண்ணாமலை மக்களா மறக்கப்படுவார்.
திமுக அரசின் அவலங்களை மக்களிடையே கொண்டு செல்வோம் என்ற அவர், கட்சி இணைப்பு குறித்து செயற்குழு கூட்டத்தில் எதுவும் பேசவில்லை எனவும், சசிகலா சுற்றுப்பயணம் குறித்து கவலையில்லை எனத் தெரிவித்தார். விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பட்டு வளர்ச்சித்துறை நிர்வாகம் அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு!