மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல. தமிழகத்தில் இருமொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (ETV Bharat Tamil Nadu)
வேலூர்: 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறையின் சார்பில் 2026 லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளது. ஆனால், அதிமுக, தமது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் மக்களை நம்பிதான் இருக்கிறது.தற்போது, ஸ்டாலின் வெளியே செல்லும்போது குழந்தைகள் தம்மை அப்பா என்று கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். குழந்தைகள். பாலியல் துன்புறுத்தலின்போது அப்பா.. அப்பா... என்று கதறும் சத்தம் அவருக்கு கேட்கவில்லையா?
இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது:
அதிமுக குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை. வருகின்ற 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய வெற்றி கூட்டணி அமையும்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ளது சரியல்ல. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல. தமிழகத்தில் இருமொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது.
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்வோம் என திமுக கூறி நான்கு ஆண்டு காலம் ஆட்சி முடிந்தும் இதுவரை ரத்து செய்யவில்லை. ஏழை மக்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்றியது அதிமுக அரசாங்கம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஸ்டாலின் திறமையற்ற பொம்மை முதலமைச்சர்.
ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் போதைப்பொருள்கள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகமாகிவிட்டது. இப்போது காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதால் தமிழ்நாடு போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக காணப்படுகிறது. இரண்டு மாதத்தில் 141 கொலைகள் நடந்துள்ளன. இதுதான் திமுகவின் சாதனை. காவல்துறை செயலிழந்துவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி சாதனை செய்த அரசாங்கம். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு, இந்த சாதனையை ஸ்டாலின் படைத்துள்ளார். 2026 குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.