கோயம்புத்தூர்: அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி அவிநாசி-அத்திக்கடவு திட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அன்னூர் அருகே இன்று (பிப்ரவரி 09)-நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில், எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சார்பில் சீர்வரிசை மற்றும் மாட்டு வண்டியில் அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “இது எனக்கு கிடைத்த பாராட்டு அல்ல விவசாயிகளுக்கு கிடைத்த பாராடு. அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட போது மத்திய அரசு அல்லது வங்கிகளிடம் நிதி பெற்று செய்யலாம் என்றனர். ஆனால், எப்போது பணி முடியும் என்பதை கூற முடியவில்லை.
உரிய நேரத்தில் திட்டத்தை முடிக்க, நான் மாநில அரசின் நிதிலேயே திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டேன். பணிகளை வேகமாக முடிக்க ஒப்பந்தம் எல்.என்.டி-க்கு வழங்கப்பட்டது. பணி நடைபெற்றபோது கரானோ தொற்று பாதிப்பால் சற்று தொய்வு ஏற்பட்டது. சுமார் 85 சதவீத பணிகள் முடிவடைந்து, நிலம் கையகப்படுத்துவதில் 15 சதவீத பணிகள் மீதம் இருந்தன. அவற்றை ஒரு வருடத்திற்குள் முடித்திருக்கலாம்.
ஆனால், ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் திட்டத்தை கிடப்பில் போட்டு, நான்கு வருடமாக காலம் தாழ்த்தி தற்போது தான் இந்த திட்டத்தை திறந்து வைத்துள்ளனர். அதேபோல, குடிமராமத்து திட்டம் மூலம் குளம், குட்டைகளில் வண்டல் எடுக்க அனுமதி வழங்கி ஏரிகளை ஆழப்படுத்தி அந்த மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மீண்டும் அதிமுக ஆட்சி நிச்சயமாக அமையும். அப்போது கண்டிப்பாக விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்து இரண்டாம் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கேரிக்கையான ஆனைமலை நல்லாறு, பாண்டியாறு புன்னம்புழா திட்டம்நிறைவேற்ற கேரள முதலமைச்சரை சந்தித்து உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிமுக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால், திமுக அரசு எதுவும் செய்யாமல் அதிமுக கொண்டு வந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. விவசாயிகளை சுட்டுக்கொன்ற அரசு திமுக. தற்போது உள்ள அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர். அடுத்த மறை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.