கோயம்புத்தூர்:கடந்த அதிமுக ஆட்சியில், வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 61 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.160 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட பணிகள் நடைபெற்ற இத்திட்டத்தில், 37 சதவீதம் வரை பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெள்ளலூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதனால், அதே பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்:
இந்நிலையில், கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் கோவை மேயர் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 30 ) திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. இதில், வெள்ளலூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் லாரிப்பேட்டையாகவும், காய்கறி சந்தையாகவும் மாற்றப்படும் என்று 90 வது தீர்மான பொருளாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பேனருடன் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மாமன்ற கூட்டத்தில் தொடர்ச்சியாக அதிமுக கவுன்சிலர்கல் மட்டுமே பேசிக்கொண்டு இருப்பதாகவும், பிற கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் நிலவியது.