தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரில் பிஎஸ், எம்டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு..! - admission for BSC MTech studies

IIT Madras zanzibar opens Admission: ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரில் பிஎஸ், எம்டெக் ஆகிய பாடத்திட்டங்களில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி மெட்ராஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 5:47 PM IST

சென்னை: ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் வளாகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இரண்டாவது ஆண்டில் பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, எம்டெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (B.S. in Data Science and AI & M.Tech in Data Science and AI) ஆகிய பாடத்திட்டங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என ஐஐடி மெட்ராஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மாணவர் சமூகங்களின் அளவு கடந்த உற்சாகத்தைத் தொடர்ந்து, இரு பாடத்திட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இக்கல்வி நிறுவனம் பரிசீலித்து வருகிறது. கற்பித்தல்-கற்றல் அனுபவங்களை அதிகளவில் வழங்கவும் சந்தையின் தேவைக்கு ஏற்ப அளிக்கவும், தொழில்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

2023-ம் ஆண்டில் ஐஐடி-களிலேயே முதல்முறையாக ஐஐடி மெட்ராஸ் தான் வெளிநாட்டில் முழு அளவிலான கல்வி வளாகத்தை நிறுவியது. இந்நிலையில், பிஎஸ் பட்டப்படிப்பிற்கு ஏப்ரல் 15ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான நேர்காணல் மற்றும் பரிசோதனைத் தேர்வு ஜூன் 9ந் தேதி (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை) நடைபெறும். எம்டெக் படிப்பிற்கு மார்ச் 15ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறையின் பல்வேறு நிலைகள், மதிப்பீட்டின் விவரங்கள், ஸ்கிரீனிங் சோதனை முறை, கட்டண அமைப்பு, முக்கிய நாட்கள், விரிவான பாடத்திட்டம், தகுதி அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை https://www.iitmz.ac.in/IITMZST_Information_Brochure_2024_v1.1.pdf என்ற இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரின் பொறியியல் மற்றும் அறிவியல் பள்ளிப் பொறுப்பு இயக்குநர் மற்றும் முதல்வர் ப்ரீத்தி அகலாயம் கூறுகையில், "ஐஐடிஎம் சான்சிபாரில் இருந்து கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்பிராந்தியத்தில் கல்விமுறையில் மாற்றத்தைக்கொண்டு வரவும், திறன் அடிப்படையிலான கல்வியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தேர்வு மையங்களைச் சேர்த்து விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு பிராந்தியங்கள், மத்திய கிழக்கு, தெற்காசியா ஆகிய பகுதிகளில் உள்ள 19 சர்வதேச மையங்களில் ஆன்லைன் ஸ்கிரீனிங் சோதனைகள் நடைபெறும். உள்நாட்டு மையங்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அணுகும் வகையில் தேர்வு மையங்களை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.

2023-ல் சான்சிபார் வளாகம் தொடங்கப்பட்டபின் இந்தியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இந்த பிராந்தியத்தின் கல்விமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தவும், திறன் அடிப்படையிலான கல்விக்கான தேடலில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதையும் இக்கல்வி நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது" என்றார்.

மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை:தொடர்ந்து அந்த அறிவிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், "பிஎஸ் மற்றும் எம்டெக் மாணவர் சேர்க்கை நடைமுறை விரிவான மூன்று நிலைகளைக் கொண்டதாகும். விண்ணப்பிப்போரின் குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமின்றி, விண்ணப்பதாரர்களின் இணைப் பாடத்திட்டம், பாடநெறியைக் கடந்த நற்சான்றிதழ்கள் போன்றவையும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த துணைத்திறன்கள் 10 சதவீத அளவுக்கு கணக்கிடப்பட்டு, தேர்வு முறையின் முதல் கட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.

அடுத்த நிலையில், ஸ்கிரீனிங் சோதனை (IITMZST) மூலம் பல்வேறு பாடங்களில் மாணவர்களின் திறன்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணக்கிடப்படுகின்றன. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். இந்த மூன்றாம் கட்ட சோதனை 30 சதவீத அளவுக்கு கணக்கில் கொள்ளப்படும். பிஎஸ் படிப்புக்கான தேர்வுமுறை ஆங்கிலம், புரிதல், பகுப்பாய்வுத் திறன், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஸ்கிரீனிங் தேர்வுக்கு அதிகபட்சமாக 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். எம்டெக் படிப்பிற்கான தேர்வு மார்ச் 31ந் தேதி அன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை) நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் தொழில்நுட்பத் திறனாய்வு, பொதுத் திறனாய்வு (Technical Aptitude and General Aptitude) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பரிசோதனை தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண் 60. தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரோஜ்கர் மேளா: நாடு முழுவதும் இன்று 1 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கும் பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details