சென்னை: செங்குன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு, ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா?" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுக ஆள் தானே? (ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார். போதைப்பொருட்களுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தமிழக தாய்மார்களின் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லை" என பேசினார்.
குஷ்புவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக குஷ்புக்கு எதிராக கண்டனங்கள் எழும்பின. குறிப்பாக திமுகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குஷ்பு தனது X சமூக வலைத்தள பக்கத்தில் தன் மீது எழும் எதிர்ப்புகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், "திமுகவினர் பதறி அடித்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. நீங்கள் செய்திகளில் நிலைத்து இருக்க உங்களுக்கு குஷ்பு தேவை, இல்லையெனில் யாரும் உங்களை கவனிக்க மாட்டார்கள்.
1982ஆண்டில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை 'பிச்சை' என்று முரசொலிமாறன் கூறியதற்கு இந்த கூட்டத்தைச் சேர்ந்த யாரும் குதித்துக் கொண்டு கண்டனம் தெரிவித்ததை நான் பார்க்கவில்லை. மேலும், பெண்கள் பேருந்தில் ஓசியில் செல்கின்றனர் என்று பொன்முடி கூறியபோதோ, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கலைஞர் வீசிய பிச்சை என வேலு கூறியபோதும் நீங்கள் அனைவரும் நீங்கள் அனைவரும் பார்வையில்லால், செவி கேட்காமல் மாற்றுத்திறனாளிகளாக இருந்தீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அந்த பதிவில், "போதைப்பொருட்களின் புழக்கத்தையும், டாஸ்மாக்கில் இருந்து நீங்கள் பெறும் கமிஷன்களையும் நிறுத்துங்கள். உழைக்கும் மக்கள் டாஸ்மாக்கில் செலவு செய்யும் பணத்தை எங்கள் பெண்களை சேமிக்க விடுங்கள். நீங்கள் அவர்களுக்கு வழங்கும் பணத்தை விட, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மூலம் அவர்கள் அடையும் வேதனை மிகவும் கொடியது.
பெண்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். நீங்கள் வழங்கும் ஆயிரம் ரூபாய் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்கள், தங்கள் குடும்பத்தை நடத்த தேவைப்படுவதை கவுரவத்துடன் சேமித்து கொள்வார்கள். ஆனால், திமுகவினர் அவர்களின் அடுத்த 14 தலைமுறைகளை பாதுகாக்க, இந்த உலகத்திலேயே அதிக அளவில் பணத் தேவை உள்ளவர்கள் என நான் நினைக்கிறேன். உங்களில் பொய் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள், தமிழகத்தில் நீங்கள் எந்த அளவிற்கு தோல்வி அடைந்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்க அது தான் ஒரே வழி" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:“ராமர் தமிழகத்தில் உள்ளாரா?” பாத யாத்திரை வந்த உ.பி-யை சேர்ந்த இளம் பெண் துறவி மீது தாக்குதல்!