சென்னை : பிராமண சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது.
இவர் பேசிய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இவ்வாறு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமுக வலைதளம் மூலமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகை கஸ்தூரிக்கு சம்மன் வழங்க அவருடைய இல்லத்திற்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியானது.