சென்னை:நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று (மார்ச் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடெங்கும் அமல்படுத்தி இருப்பதாக மத்திய அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக, இந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் 2019-ல் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் எனப் பலரிடமும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
இதனிடையே, பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டம், நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனவும், மக்களிடையே உள்ள சமூக நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் இச்சட்டம் சீர்குலைக்கும் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள இந்த சிஏஏ சட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அதில் தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, அக்கட்சியின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பாஜகவுடன் கூட்டணி உறுதி.. அணிலைப் போல் உதவிகரமாக இருப்போம்" - டிடிவி தினகரன் பேட்டி!