சென்னை:இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை நடிகர் விஜய் வெளியிட்டு உள்ளார். அதில் அவர், "தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.
இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதிலும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை காவல் துறை வழங்கியது.
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிக்கு 21 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை காவல்துறை வழங்கி உள்ளது. நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறது.