செய்தியாளர்கள் சந்திப்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவர் ஆர்.ஏ.ராஜ் (video credit to ETV Bharat Tamil Nadu) திருவாரூர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். தொடர்ந்து, வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
அதேபோன்று, நடிகர் விஷாலும் தான் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் ரசிகர் மன்றத்தைப் பலப்படுத்தி அரசியலில் இறங்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில், திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவர் ஆர்.ஏ.ராஜ் தலைமையில், மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க மாநிலப் பொருளாளர் ஹரி, மாவட்டத் தலைவர் குணா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வார்டு வாரியாக நற்பணி இயக்க கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், புதிய பொறுப்பாளர்களை நியமித்து நற்பணி இயக்கத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவர், "தமிழகம் முழுவதும் பரவலாக மாவட்ட வாரியாக நற்பணி இயக்க கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி போன்றவற்றிற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தனை வருடமாக மன்ற கட்டமைப்பைப் பலப்படுத்தாமல் தற்போது பலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்விக்கு, நாங்கள் வழக்கமாக இதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். மேலும், இயற்கைப் பேரிடர் போன்ற எந்த இடர்பாடு வந்தாலும், எங்கள் அண்ணன் அரசாங்கத்திற்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
மேலும், கிராம வாரியாக விரைவாக இது போன்ற நற்பணிகள் சென்று சேர வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இந்த கூட்டத்தைக் கூட்டி வருகிறோம். நடிகர் விஜயைத் தொடர்ந்து சூர்யாவும் அரசியலுக்கு வருவதற்கு முன்னேற்பாடாக இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, அது காலத்தின் கட்டாயம், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
விஜய் உள்ளாட்சித் தேர்தலில் நின்று ஆழம் பார்த்த பின்பு தான் தற்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். தற்போது உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. நீங்கள் இப்படி கூட்டம் போடுவதன் மூலம், அதே பாணியை நீங்களும் பின்பற்றுகிறீர்களா என்ற கேள்விக்கு, அப்படிச் சொல்ல முடியாது. அதற்குக் காலம்தான் பதில் சொல்லும் என்றார்.
மன்றத்தின் உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தம்பிகளுக்கு புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், கிராமங்கள் வரை நற்பணிகள் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்திலும் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் திறனாய்வாளர்கள் சூர்யா அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருப்பதன் முன்னோட்டமாக இந்த கூட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விக்கு, ஒரே பதில் தான், அதற்கு காலம் தான் பதில் சொல்லும். திரும்பத் திரும்ப இதைத்தான் சொல்ல முடியும் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட திருவாரூர் மாவட்ட தலைவர் குணா, கடந்த 20 வருடமாக மன்றம் இருப்பதால், ஏற்கனவே வயதான பொறுப்பாளர்கள் இருப்பதால் சற்று தொய்வைச் சந்தித்து இருக்கிறது. இந்த கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நற்பணிகளை பலப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கிறது. அரசியல் என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் எனது வார்டில் நான் போட்டியிடுகிறேன் என்றால் அது எனது தனிப்பட்ட விருப்பம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல்.. புதிய திட்டம் விரைவில் துவக்கம்! - Whatsapp Messages For Students