தென்காசி:தென்காசி அடுத்த இலஞ்சியில் உள்ள தனியார் உணவகத்தின் திறப்பு விழாவில், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டு, உணவகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். மேலும், தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகிறேன். அதன் படப்பிடிப்பிற்காக தான் வந்துள்ளேன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திரைப்படம் ஒன்று இயக்க உள்ளேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் குறித்து கூறுகையில், "நடிகர் சூரி கடுமையான உழைப்பாளி. அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவரது வளர்ச்சியைக் கண்டு வருகிறேன். அவர் இன்னும் பல வெற்றிகளைச் சந்திப்பார்" என புகழாரம் சூட்டினார், சமுத்திரக்கனி.
இதையும் படிங்க:வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் குறித்த சர்ச்சை பேச்சு.. சத்யராஜின் பதில் என்ன?
திரையுலகில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் அதனைக் கடந்து சென்று விட வேண்டும்" எனக் கூறினார். பின்னர், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலைகள் குறித்து சமுத்திரக்கனியுடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "தனி மனிதனின் மனதில் மாற்றம் உருவாக வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுப்பதன் வாயிலாக வருங்கால தலைமுறை மாறும்" எனக் கூறினார். மேலும் பேசிய அவர், மக்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்து விட்டது. குறிப்பாக, கிராமப்புறங்களில் திரையரங்குகள் வருமானம் இல்லாமல் மூடப்படுகின்றன.
ஆனால், மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் வளர்ந்து கொண்டே உள்ளது. என்ன நிலை ஏற்பட்டாலும் சினிமா வளர்ந்து கொண்டே தான் இருக்கும். ஹைதராபாத் போன்ற இடங்களில் பாலகிருஷ்ணா படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் ரசிகர் திரையரங்கில் கிடா வெட்டி கொண்டாடுகின்றனர். இத்தகைய ரசிகர்கள் இருக்கும் வரை சினிமா வளர்ந்து கொண்டே தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மெட்ரோ திரைப்பட வெற்றிக் கூட்டணியில் தயாராகும் 'நான் வயலன்ஸ்' விரைவில் வெளியீடு!