சென்னை:போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை, டிசம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, ஆன்லைன் ஆப் மூலமாக போதைப் பொருள்களை விற்பனை செய்ததாகக் கல்லூரி மாணவர்கள் 5 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஜெ.ஜெ நகர் போலீசார துக்ளக்கை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, துக்ளக் சார்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இந்த மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.