சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம்வரும் இளையராஜா, ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையமைப்பில் பாட்டு பாட அனைத்து பாடகர்களும் தவம் இருப்பர். இவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசை அமைப்பாளர்களாக உள்ளனர். மகள் பவதாரிணியும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில் இவர் புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த பவதாரிணி கடந்த 25ம் தேதி திடீரென காலமானார். இது திரைப்பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்ள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது குரலில் பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அனைவரது விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இவர் பாடிய 'ஆத்தாடி ஆத்தாடி' என்றப் பாடல் மிகவும் வெற்றிபெற்ற அனைவரின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இப்படி பிரமிக்கவைக்கும் குரலில் பல்வேறு வெற்றிப் பாடல்களை கொடுத்த பவதாரிணி எதிர்பாராத விதமாக காலமானதையடுத்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக இலங்கையில் உயிரிழந்த பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு கடந்த 27ம் தேதி தேனியில் உள்ள பண்ணைபுரத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேனியில் இளையராஜா மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் கண்கலங்கி அழுதது ரசிகர்களை கண்கலங்கச் செய்தது. இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற நடிகர் கமல்ஹாசன், மகள் பவதாரிணியை இழந்து வாடும் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்.. பணிகளை துவக்கி வைத்த பிறகு ஆணையர் கூறியது என்ன?