மதுரை: அண்மையில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 31-ஆவது ஆண்டு கருத்தரங்கு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவியேற்கவுள்ள, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
இந்திய தொல்லியல் துறை இயக்குநர் பதவி:"இந்திய தொல்லியல் துறைக்கு இயக்குநராகப் பொறுப்பேற்பது மிக மகிழ்ச்சியான தருணம். வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளேன். இந்தப் பதவியின் மூலமாக தமிழ்நாட்டிற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனைதான் உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் தற்போது கிடப்பில்தான் உள்ளன. அவற்றை மேற்கொண்டால்தான் முழுமையான தகவல்கள், தரவுகள் நமக்குக் கிடைக்கும். சிந்து சமவெளி நாகரிகம் குறித்து நிறைய ஆய்வுகள் நாம் செய்துள்ளோம். அதன் தொடர்ச்சிகளைப் பற்றி நாம் இதுவரை ஆய்வுகளை மேற்கொண்டதில்லை. அதனை செய்வதற்கு இந்தப் பதவி பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்"
அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தமிழகத்தின் தொன்மையான தொல்லியல் அகழாய்வுகள் குறித்த பார்வை:தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறோமே தவிர, அவற்றின் ஒன்றுக்கொன்றுடனான தொடர்புகள் குறித்து இணைத்துப் பார்ப்பதில்லை. ஒரு ஆய்வினை தனித்தனியாகப் பார்ப்பதை விட்டுவிட்டு, அனைத்தையும் ஒரு கோர்வையாக இணைத்து இவற்றின் தன்மைகளை ஆராய வேண்டும். அப்போதுதான் அந்த ஆய்வுகளுக்கிடையே உள்ள ஒற்றுமையை உணர முடியும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எவ்வாறு வளர்ந்தன என்பதை ஆய்வு செய்ய வேண்டியது மிக முக்கியம். தமிழ்நாட்டில்கூட வைகை, பொருநை, பாலாறு, அரிக்கமேடு ஆய்வுகளையெல்லாம் தனித்தனியாகவே நாம் பார்க்கிறோம். எவ்வாறு சிந்துசமவெளி நாகரிகத்தை மிகப் பெரிய நாகரிகமாகக் காண்கிறோமோ அதுபோல அனைத்து ஆய்வுகளையும் ஒருங்கிணைத்து அதன் ஒற்றுமைகளை ஆராய வேண்டும். இதன் மூலம் பல தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.
சிந்துசமவெளியோடு கீழடி தொடர்பு: சிந்துசமவெளியைக் கட்டமைத்தவர்கள் திராவிடப் பழங்குடியினர்தான் என்பதை உறுதிப்படுத்தி மரபணு ரீதியாக நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். சிந்துசமவெளியில் வாழ்ந்த மக்கள் எங்கே சென்றிருக்க வேண்டும்? அந்நாகரிகம் அழிந்துவிட்டதா? அதற்கான வாய்ப்புகள் இல்லை. அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி புலம்பெயர்ந்திருக்க வேண்டும்.
அவர்களுடைய தொடர்புகளை, தொடர்ச்சிகளை தங்களோடு எடுத்துச் சென்றிருப்பார்கள். அந்தத் தொடர்பையும், தொடர்ச்சியையும்தான் நாம் தேட வேண்டும். அப்போதுதான் அதனை ஒப்பீடு செய்ய முடியும். கீழடியையும், பட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அதனை ஒரு நாகரிகமாக நாம் பார்க்க முடியும். அதுபோன்றுதான் சிந்துசமவெளியையும் கீழடியையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், இரண்டையும் புரிந்து கொள்ள முடியும். அதற்கான அகழாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:'வரலாறு முக்கியம் அமைச்சரே'.. சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுவது என்ன?
ராக்கிகடி நாகரிகம் குறித்த ஆய்வறிஞர் டேவிட் ரீச்சின் கருத்து: ராக்கிகடியில் கிடைத்த எலும்புக்கூடு மரபணு மூலக்கூறின் அடிப்படையில், அங்கு வாழ்ந்த மக்கள்தான் இந்திய முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்று டேவிட் ரீச் கூறுகிறார். நாம் திராவிட மக்கள் என்று கூறுகிறோம். ஆனால், திராவிடர்கள் தமிழ்நாட்டில் மட்டும் வாழவில்லை. இந்தியா முழுவதும் வாழ்கிறார்கள்; பல மொழிகள் பேசுகிறார்கள்; பல்வேறு பழங்குடிகள் திராவிடப் பழங்குடிகளாக உள்ளனர்.
வட இந்தியாவில் வாழும் பல இனக்குழுக்கள் திராவிடப்பழங்குடிகளாக உள்ளனர். அதேபோன்று தென்னிந்தியாவிலும் உள்ளனர். ஆனால், அவர்கள் பேசுகின்ற மொழி மாறியுள்ளது. ஆரிய நாகரிகத்திற்கு முன்னால் வாழ்ந்த மக்களின் நாகரிகம்தான் சிந்துசமவெளி நாகரிகம். அந்த உண்மைகளைக் காண அனைத்துப் பகுதிகளிலும் மரபணு மூலக்கூறு ஆய்வுகளையும் மேற்கொண்டால் அதற்கான தரவுகளும் ஆதாரங்களும் கிடைக்கும்.
தொல்லியல் குறித்த விழிப்புணர்வு: பல்வேறு அகழாய்வுகள் மக்களுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையால் அதன் பலன் அவர்களுக்குதான் போய்ச்சேர வேண்டும். ஏனென்றால், அரசுப்பணி என்பது அரசுக்கானது மட்டுமன்று, அது மக்களுக்கானதும்தான்.
கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்டம் ஈடுபட்டபோது, அதனைக் காண வருகின்ற மக்களுக்கு விளக்கிக் கூறியதால்தான் இன்றைக்கு தொல்லியல் குறித்த மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆய்வு மேற்கொள்கிறவர்களும், தங்களது ஆய்வுகளின் விபரங்களை முறைகளை விளக்கினார்கள் என்றால் அது அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும். அதனைச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
தமிழகத்தின் தொல்லியல் அகழாய்வுகள்: தமிழக அரசு மேற்கொண்டு வரும் அகழாய்வுகள் நல்லபடியாக உள்ளன. அதனை பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். அகழாய்வைக் காண வருகின்ற மாணவ, மாணவியருக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் விளக்கிச் சொன்னால்தான் அந்தத் தலைமுறைக்கு தகவல் சென்று சேர வாய்ப்பாக இருக்கும்" என்றார்.