மதுரை:தமிழ்நாட்டில் கோடைக் காலம் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம்(மே 4) முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.
வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு தொடர்ந்து பதிவாகி வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை காரணமாக வெளியில் செல்லும் பொது மக்களுக்கு, உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறி உப்பு சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலைச் சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது சிலர் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால், அவர்களுக்குப் பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது.