வேலூர்: 2024நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தற்போது வரை நாடு முழுவதும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்' என்று அழைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த வகையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு (EVM) இயந்திரங்கள், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகிற ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, புதிய நீதிக்கட்சித் தலைவரும், வேலூர் பாஜக வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஏ.சி.சண்முகம் கூறியதாவது, “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சிறப்பான முறையில் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார். பலத்த போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எளிதாக யாரும் உள்ளே செல்ல முடியாது.