தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழக அரசுக்கு அச்சம்”.. மாரத்தான் தடை விதிப்புக்கு காரணம் கூறிய ஏ.சி.சண்முகம்! - தமிழகத்தில் பாஜகவின் நிலை

A.C.Shanmugam: அமெரிக்கா, பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி பதவியில் இருப்பதற்கு, பிரதமர் மோடி அந்நாடுகளுக்குச் சென்று இந்திய மக்களைச் சந்தித்ததே காரணம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்

A.C. Shanmugam
ஏ.சி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 3:22 PM IST

வேலூர்:ஏசிஎஸ் குழுமம் சார்பில், வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பேரவை தொகுதிகள் வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 6 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது வேலைவாய்ப்பு முகாம் வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் நேற்று (மார்ச் 10) நடைபெற்றது.

அதில், 130 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தி, ஆயிரத்து 689 பேரை தேர்வு செய்தனர். வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பணி ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 9 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை 294 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, 1.90 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனையும், 3,800 பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளோம். மேலும், 7 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், சுமார் 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“ஸ்டாலினும், உதயநிதியும் பதவி விலக வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி காட்டமாக வலியுறுத்தல்

மேலும், கிரிக்கெட், கபடி, மாரத்தான் போன்ற பல்வேறு போட்டிகளும், போதைப்பொருட்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் நடத்தப்படவிருந்த மாரத்தான் போட்டிக்கு காவல்துறை உரிமம் இல்லை எனக் கூறி தடை செய்துவிட்டது.

பதவியில் இருக்கக்கூடியவர்கள் அச்சப்படுகின்றனர். முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டி மாநில அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால்தான், இந்த போட்டிக்கு தடை விதித்தனர்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது (Mekedatu Issue) பகுதியில் கர்நாடக அரசும் அணை கட்ட முயற்சிக்கிறது. இதைத் தடுக்க, தமிழக அரசுதான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தந்த மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

பிரதமர் மோடியின் ராஜதந்திரம் மூலம், அயல்நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மேலும், அண்ணாமலை நடைபயணத்துக்கு பிறகு தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. இது வரக்கூடிய மக்களவைத் தேர்தல் முடிவுகளில் உறுதி செய்யப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:"திமுக தமிழகத்திற்கு சாபக்கேடான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது" - வானதி சீனிவாசன் கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details