தேனி:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 57 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதி அணைக்கரைப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் அகிலேஷ் (6), அஸ்வின் (5) ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் ஒரு சிறுமிக்கு அம்மை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை போடி அரசு மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இரு சிறுவர்களும் கடுமையான வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு, பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் படித்து வரும் தொடக்கப்பள்ளியில், மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் நேரில் சென்று பள்ளியையும், அங்கன்வாடியையும் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படித்து வரும் 13 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் 1 சிறுமிக்கு வீங்கி அம்மை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வரவில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், அணைக்கரைப்பட்டி ஊராட்சித் தலைவர் லோகநாதனிடம் இந்த தகவலை தெரிவித்த நிலையில், இருவரும் சென்று பள்ளியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராதது குறித்து அங்குள்ள ஆசிரியர்களிடம் விசாரித்த போது. திடீரென ஆசிரியர்களுக்கும், ஊராட்சித் தலைவர் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.