சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள், நேற்று நள்ளிரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகள் வெளியில் வந்தபோது, ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், அதில் சந்தேகத்திற்கிடமான 3 பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதோடு அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்த போது, அவர்களுடைய உள்ளாடைகள், கைப்பைகள் போன்றவைகளில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்டுகள் மற்றும் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அடுத்ததாக துபாயில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானம், அதேபோல் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானம் ஆகிய இரு விமானங்களிலும், இவர்களைப்போல் கடத்தல் குருவிகள் தங்க கட்டிகள், நகைகளுடன் வருவதாக தெரிவித்தனர்.
உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், தரையிறங்கிய அந்த இரு விமானங்களில் வந்த பயணிகளையும் கண்காணித்து சந்தேகப்பட்ட 6 பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கைப்பைகளில் இருந்த ரகசிய அறைகள் மற்றும் தங்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், தங்க கட்டிகள் போன்றவைகளையும் பறிமுதல் செய்தனர்.