சென்னை:சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் இந்த விமானத்தில் மலேசியா செல்வதற்காக வந்திருந்தார்.
இந்நிலையில், அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அதில் என்ன இருக்கிறது எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதற்கு அந்த நபர் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு சோறு வகைகள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல அதிகாரிகளுக்கு தெரிந்ததால், அந்த அட்டைப்பெட்டியை சோதனைக்காக திறந்துள்ளனர். அப்போது உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அந்த பயணியையும், அட்டைப் பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியின் மலேசியா பயணத்தை ரத்து செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பின் அந்த இரண்டு அட்டைப் பெட்டிகளிலும் இருந்த நட்சத்திர ஆமைகளை கணக்கிட்ட போது, அதில் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.