சென்னை:பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு 2ஆம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. தரவரிசை எண் 26,655 முதல் 1,04,602 வரை 85 ஆயிரத்து 295 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தற்பொழுது தற்காலிக ஒதுக்கீடாக 63 ஆயிரத்து 729 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் இளங்கலையில் 2,33,376 இ்டங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் கட்ட கலந்தாய்வில் 19 ஆயிரத்து 922 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் சுற்று பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்-ஆஃப் மதிப்பெண் 178.975 முதல் 142 வரை உள்ள 77,948 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 12ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை தேர்வு செய்தனர்.