சென்னை: சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பது தெரியவந்தது. மேலும், விஜயகுமார் என்பவர் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மணிவண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் 900 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:தஞ்சை பீச்சோரம் கிடந்த பை.. அதிர்ந்த போலீசார்.. ரூ.2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்!
மேலும் விசாரணையில், இவர்கள் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இத்தகைய போதைப் பொருட்களை கடத்தி வந்து, கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு சென்று, அங்கு விற்பனை செய்வது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரிடமும் இருந்து சுமார் 2.700 கிராம் போதைப பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் சர்வதேச மதிப்பு 27 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும், 15 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.