தஞ்சாவூர்:தமிழர்கள் கொண்டாடி மகிழும் முக்கிய விழாக்களில் ஒன்றாகத் திகழப்படும் ஆடி 18ம் நாள் கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழா தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் படுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு ஆடி பெருக்கு விழாவை கொண்டாட காவிரியில் தண்ணீர் வருமா எனக் கடந்த வாரம் வரை தெரியாத நிலையில், தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர், நேற்று நள்ளிரவு கும்பகோணம் வந்தடைந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை முதல் இவ்விழாவினை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில், உள்ள பாலக்கரை டபீர் படித்துறை, பகவத்படித்துறை, சக்கரப்படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சோலையப்பன் தெரு இராஜேந்திரன் படித்துறை, அண்ணலக்ரஹாரம் படித்துறை, சுவாமிமலை படித்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளில் ஏராளமானோர் வாழையிலை போட்டு, விளக்கேற்றி வைத்து, சப்பரத்தட்டி வைத்து பூஜை நடத்தினர்.
அத்துடன் பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், விலாம்பழம், பேரிக்காய், நாவல் பழம் உள்ளிட்ட பல்வகை பழ வகைகளை வைத்தும் வணங்கினர். இதனுடன் காதோலை கருகமணி, ஊறவைத்த அரிசியில் எள்ளு, வெல்லம் கலந்து வைத்தும், மங்கல பொருட்களான மஞ்சள் நூல், தாலி கயிறு, மஞ்சள் கிழங்கு, சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் கைகூட வேண்டினர். மேலும் சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப மேன்மைக்காகவும், புதுமண தம்பதியினர் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிதாக தாலிப்பெருக்கி அணிந்து கொண்டும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.