சென்னை: கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மா(24). கூலித் தொழிலாளியான இவர், நேற்று வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தர்மாவிடம் 'உனது அண்ணன் சூர்யா எங்கே' எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு தர்மா பதிலளிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி, பீர் பாட்டில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், தடுக்கச் சென்ற தர்மாவின் நண்பன் கிஷோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் தர்மாவுக்கு வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரை மீட்ட அவரது நண்பர்கள் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தர்மா, நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.