விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணன். 32 வயதான இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. மேலும், இவர் ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் மதுபானங்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் மது விற்பனை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே, அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சரவணன் பார் ஊழியராக பணியாற்றுவதால், அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடை அடைக்கும் பொழுது, அதிகளவிலான மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனால் எதிர் தரப்பினருக்கு மதுபாட்டில்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, சரவணன் கள்ளச்சந்தையில் மது விற்று அதிக அளவில் வருவாய் ஈட்டுவதால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு தரப்பினர், நேற்று இரவு ஆத்திரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் வந்து சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.