ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சொலவனூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (47). இவருக்கு பாப்பா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ராஜன் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராணி (38) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராணி, ராஜனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜன், ராணியின் வீட்டிற்குச் சென்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் தகராறாக உருவெடுக்க, ஆத்திரம் அடைந்த ராஜன், அருகில் இருந்த மண்வெட்டியால் ராணியின் பின்னந்தலை மற்றும் உச்சந்தலையில் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ராணி, சத்தமிட்டபடி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ராணியை அங்கிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.