தமிழ்நாடு

tamil nadu

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்.. பெண் ஒருவர் கைது! - Vellore Child Kidnapping Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 2:54 PM IST

Vellore Child Kidnapping Case: வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை ஒன்றைக் கடத்திய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனை
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனை (Credits- ETV Bharat Tamil Nadu)

வேலூர்:வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேர்ணாம்பட்டு அரவட்லா மலைக் கிராமத்தைச் சார்ந்த சின்னி (20) என்பவர், கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, சின்னிக்கு அன்று (ஜூலை 27) இரவு ஒன்றரை மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 28ஆம் தேதி காலை, சின்னி பிரசவ வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளார்.

குழந்தை கடத்தல் சம்பவத்தின் சிசிடிவி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், நேற்று (ஜூலை 31) காலை சுமார் 8 மணி அளவில் பெண் ஒருவர் குழந்தையின் பாட்டியிடம் உணவு பொட்டலத்தைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு அக்குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். இவ்வாறு பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் கடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, இந்த குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் இந்த விசாரணையில், இடையஞ்சாத்து கிராமத்தைச் சேர்ந்த வைஜெயந்திமாலா என்ற பெண்தான் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் வைஜெயந்திமாலாவை கைது செய்துள்ளனர்.

மேலும், வைஜெயந்திமாலாடம் விசாரித்தபோது, குழந்தையை பெங்களூரைச் சேர்ந்த செல்லதுரை என்பவருக்காக கடத்தியதாகவும், வேலூர் இடையாஞ்சாத்து கிராமத்தில் செல்லதுரைக்குச் சொந்தமாக உள்ள வீட்டை வைஜெயந்திமாலா பராமரித்துக் கொள்வதாகவும் தெரியவந்தது.

இதுமட்டுமல்லாது, செல்லதுரைக்கு வெகு ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால், குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த செல்லதுரைக்காக மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையை கடத்தியதாக வைஜெயந்திமாலா கூறியுள்ளார்.

இதனை அடுத்து, இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார், தற்போது கடத்தப்பட்ட குழந்தையை செல்லதுரையிடம் இருந்து மீட்பதற்காக பெங்களூருக்குச் சென்றுள்ளனர். இதற்கிடையே, இந்த குழந்தை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேரை பிடித்து போலீசார் கிருஷ்ணகிரியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:காளிகாம்பாள் அர்ச்சகர் கார்த்திக் மீது புதிய புகார்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details