திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி மஞ்சு. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், மஞ்சு சொந்தமாக ஷிப்ட் டிசையர் கார் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில், இதனை சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்த பைரோஸ் கான் என்பவர்களிடம் ரூ.1 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார். இதனை இருவரும் கூட்டு சேர்ந்து போலியாக பத்திரம் தயார் செய்து, மாற்று நபருக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மஞ்சு அடமானம் வைத்த நபர்களிடம் கேட்கும் பொழுது, உனது காரை தர முடியாது என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், தனது காரை இவர்களிடமிருந்து மீட்டுத் தரக்கோரி மஞ்சு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இன்று காலை கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.