திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த பழனி நகர்மன்றம் வணிகர்களுக்கு அழைப்பு விடுத்தது. மலை அடிவாரத்தில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிகர்களுக்கு இடையூறு செய்வதாகவும், மேலும், கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனால் பல ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்போது பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், வணிகர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் நீதிமன்றம் மூலம் பராமரிப்பிற்கு கேட்டு வருகிறது.
இந்த நிலையில், தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், பழனி நகர்மன்ற உறுப்பினர்கள் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களிடம் அழைப்பு விடுத்தனர். கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் உள்ளூர் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.