தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி கூவமாக மாறி வரும் திருப்பத்தூர் பெரிய ஏரி.. நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?

திருப்பத்தூர் பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இறந்த மாடு ஒன்றை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை என மக்கள் குமுறல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 4:31 PM IST

திருப்பத்தூர் பெரிய ஏரி
திருப்பத்தூர் பெரிய ஏரி (credit - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அடையாளங்களில் திருப்பத்தூர் நகரில் உள்ள பெரிய ஏரியும் ஒன்றாகும். 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி தற்போது குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

கோடை காலத்திலும் வற்றாமல் இருக்கும் இந்த பெரிய ஏரியில் டன் கணக்கில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் அவ்வழியாக செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குப்பை கழிவுகள் மட்டுமின்றி, இறைச்சி கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இறந்த மாட்டை இந்த பெரிய ஏரியில் வீசி சென்று உள்ளனர். இதனால் கரையோரம் வீசிய துர்நாற்றம் தாங்காமல் அவ்வழியாக சென்ற மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

இதையும் படிங்க:இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு.. அச்சத்தில் தவிக்கும் 112 குடும்பங்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும், அந்த இறந்த மாட்டை நாய்கள் கடித்து இழுத்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. முன்னதாக, இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர்க்கு தெரிவித்தும் பெரிய ஏரியில் இறந்து கிடக்கும் மாட்டை அப்புறப்படுத்தாமல் மெத்தன போக்காக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சி சார்பில் இறந்த அந்த மாட்டை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக, உள்ளூர் மக்கள் அந்த ஏரியை பயன்படுத்தவும் அஞ்சுகின்றனர்.

கிராம பகுதிகளில் நீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு ஏரி, குளங்கள் பெரும் உதவி புரிகின்றன. இந்த சூழலில், மர்ம நபர்கள் இறந்தது போன மாட்டை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து புதைக்காமல், நீர் ஆதாரமான ஏரியில் வீசி சென்றிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details